
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் தலிவால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஆரோன் ஜோன்ஸ் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய பர்காத் சிங் 18 ரன்களுக்கும், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கனடா அணியானது 53 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக்கோலஸ் கிர்டன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 49 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.