T20 WC 2024: டேவிட் மில்லர் அதிரடியில் நெதர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் மற்றும் மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மேக்ஸ் ஓடவுட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய விக்ரஜித் சிங் அதிரடியாக தொடங்கினாலும், 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாஸ் டி லீட் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 10 ரன்களிலும், தேஜா நிடமானுரு ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 48 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் - லோகன் வான் பீக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கினர். இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் பிரிங்கிளும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இறுதியில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களைச் சேர்த்திருந்த லோகன் வான் பீக்கும் விக்கெட்டை இழக்க, நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்ற்ன் ஆன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க தென் ஆப்பிரிக்க அணி மூன்று ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. அவர்களைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹென்ரிச் கிளாசெனும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட தென் ஆப்பிரிக்க அணி முதல் ஆறு ஓவர்களின் முடிவில் 16 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளையும் இழந்து தவித்தது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றியை ஈட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அதன்பின் மார்கோ ஜான்சன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி இரண்டு ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றி இலக்காக 16 ரன்கள் தேவைப்பட்டது. அதேசமயம் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாமல் போராடிய டேவிட் மில்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now