
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் அடுத்த சுற்றுக்கு 7 அணிகள் முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் உள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் குசால் மெண்டிஸுடன் இணைந்த தனஞ்செயா டி சில்வா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து தனஞ்செயா டி சில்வாவும் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய சரித் அசலங்கா ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்ட தசுன் ஷனகாவும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, இலங்கை அணியானது 166 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - வநிந்து ஹசரங்கா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர்.