T20 WC 2024: கடைசி ஓவர் வரை போராடிய நேபாள்; தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி20 சுற்றில் இடம்பிடித்திருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டி காக் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 15 ரன்களுக்கும், ஹென்றிச் கிளாசென் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குஷால் புர்டெல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மார்கோ ஜான்சனும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. நேபாள் அணி தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகளையும், தீபேந்திர சிங் ஐரி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் - ஆசிஃப் ஷேக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் குஷால் புர்டெல் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடலும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் நேபாள் அணி 35 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஆசிஃப் ஷேக்குடன் இணைந்த அனில் ஷாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அனில் ஷா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் திபேந்திர சிங் ஐரி 6 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிஃப் ஷேக் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஷால் மல்லாவும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். இதனால் நேபாள் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் நேபாள் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி பந்தில் குல்ஷன் ஜா ரன் அவுட்டாக, நேபாள் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now