T20 WC 2024: பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் ஏறத்தாழ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் தமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி உரா ஒரு ரன்னிலும், கேப்டன் அசாத் வாலா 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Trending
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சார்லஸ் அமினி 17 ரன்களிலும், செசே பாவ் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹிரி ஹிரி 7 ரன்களிலும், சாத் சோப்பர் ஒரு ரன்னிலும், கிப்லின் டொரிகா 5 ரன்களிலும், நொர்மன் வனுவா 14 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபர்குசன் 4 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதேசமயம் டிரென்ட் போல்ட், டிம் சௌதீ மற்றும் இஷ் சோதி ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் வில்லியம்சன்னுடன் இணைந்த டேரில் மிட்செலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணியும் இலக்கை நோக்கி முன்னேறியது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களையும், டேரில் மிட்செல் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இருப்பினும் நியூசிலாந்து அணி ஏற்கெனவே நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால், இப்போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now