
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்றுந் நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துஅணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவுசெய்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு நசீம் குஷி - பிரதிக் அத்வலே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் நசீம் குஷி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் அகிப் இலியாஸ் 16 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஸீஷன் மக்சூத், கலித் கைல் இணை ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அத்வலேவுடன் இணைந்த அயான் கானும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரதிக் அதவ்லே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரதிக் அத்வலே தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மெஹ்ரான் கான் 13 ரன்களுக்கும், ரஃபிவுல்லா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலுயனுக்கு திரும்பினார். அதேசமயம் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அயான் கான் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது.