
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கிய முகமது ரிஸ்வான் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களிலும், ஃபகர் ஸமான் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் பாபர் ஆசாமுடன் இணைந்த ஷதாப் கான் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
அதன்பின் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் தனது அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் கானும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாமும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.