
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரிஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் டிக் காக் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடி காட்டிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக தொடங்கிய் டி காக்கும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 23 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த் ஹென்ரிக் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.