டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நாளை (ஜூன் 05ஆம் தேதி) நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
Trending
அதன்படி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளார். ஆனாலும் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலியையும் தேர்ந்தெடுத்துள்ள அவர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மூன்றாம் இடத்தில் களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதவிர்த்து ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா என மூன்று ஆல் ரவுண்டர்களையும் அணியில் சேர்த்துள்ளார்.
மேற்கொண்டு அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையும், பிரத்தேக சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும் தேர்வுசெய்துள்ள அவர், அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now