-mdl.jpg)
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 118 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் 2 ரன்களுக்கும், கரீம் ஜனத் 13 ரன்களுக்கும், குல்பதீன் நைப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் முகமது நபி ஒரு சில பவுண்டரிகளை அடித்த அணிக்கு தேவையான ரன்களைச் சேர்க்க, ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசி பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.