
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியானது அமெரிக்க அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் 8 ரன்களைச் சேர்த்திருந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 12 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டீவன் டெய்லரும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் இணைந்த நிதீஷ் குமார் மற்றும் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களிலும் என ஆதில் ரஷித் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய மிலிந்த் குமார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்மீத் சிங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்த தொடங்கியது. ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஹர்மீத் சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோரி ஆண்டர்சனும் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.