
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டம் இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா, தனஞ்செயா டி சில்வா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 47 ரன்களையும், தனஞ்செயா டி சில்வா 21 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சௌமீயா சர்க்கார், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் லிட்டன் தாஸ் 36 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா 16 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.