
டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், அந்த க்ரூப்பிலிருந்து 2ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி நாளை இலங்கையை எதிர்கொள்கிறது.
எனவே வெற்றி கட்டாயத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் விளையாடவில்லை. அதனால் மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முந்தைய போட்டிகளில் ஏமாற்றமளித்த வார்னர் இந்த போட்டியில் நல்ல ஷாட்களை விளையாடினார். ஆனால் தேவையில்லாத ஒரு ஷாட்டுக்கு முயன்று 25 ரன்னில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஃப்கான் பவுலிங்கை அடித்து விளையாடிய மிட்செல் மார்ஷ் 30 பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 25 ரன்களுக்கு வெளியேறினார்.
டி20 உலக கோப்பையில் மேக்ஸ்வெல்லின் பேட்டிங் ஃபார்ம் கவலையளித்த நிலையில், இன்றைய முக்கியமான போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். 32 பந்தில் 54 ரன்கள் அடித்தார் மேக்ஸ்வெல். டெத் ஓவர்களில் மேக்ஸ்வெல்லுக்கு மறுமுனையில் ஆதரவு கிடைக்காததால் 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே அடித்தது ஆஸ்திரேலிய அணி.