
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. இதில் நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பு எகிரியுள்ளது.
ஏனெனில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளன. எனவே கடைசி போட்டியில் வெற்றி பெறும் 2 அணிகள், குறிப்பாக நல்ல ரன்ரேட்டில் கடைசி போட்டியில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நியூசிலாந்தின் ரன்ரேட் சிறப்பாக உள்ளதால் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலே நியூசிலாந்துக்கான வாய்ப்பு அதிகம். ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு ரன்ரேட் முக்கியம்.
அதேபோல குரூப் இரண்டை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அணி பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை பலவீனமாக்கியது. வலுவான இந்தியாவிடம் தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் 132 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் ஜிம்பாப்வேவிடம் தோற்றது அந்த அணிக்கு மரண அடியாகவும், அணியின் சூழலை கீழிறக்கும் விதமாகவும் அமைந்தது.