தோல்விக்கு முட்டாள்தனமான முடிவே காரணம் - ரோஹித்தை சாடும் கம்பீர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு சென்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு ஃபீல்டிங் ஒருபுறம் முக்கிய காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் பேட்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக இருந்தது. பெர்த் போன்ற களத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்றால் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் தான் இந்திய அணி விளையாட வேண்டியிருந்தது. அதற்கேற்றார் போல தான் ஸ்பின்னர் அக்ஷர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
Trending
இந்நிலையில் ரோகித்தின் முடிவு குறித்து கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “டாஸின் போது அணியில் தீபக் ஹூடாவை கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. எனினும் அவரை எதற்காக ப்ளேயிங் 11இல் கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து கேப்டன் ரோகித் விளக்கமே தரவில்லை. நானாக ஒரு யோசனைக்கு வந்துவிட்டேன்.
அதாவது தென் ஆப்பிரிக்க அணியில் இடதுகை வீரர்கள் இருப்பதால், தீபக் ஹூடா பவுலிங்கில் தாக்கம் ஏற்படுத்துவதற்காக சேர்த்தனர் என நினைத்தேன். ஆனால் ஹூடாவுக்கு பவுலிங் வாய்ப்பே கொடுக்கவில்லை. பேட்ஸ்மேனாக பயன்படுத்தினால், ரிஷப் பந்தை கொண்டு வந்திருக்க வேண்டியது தானே. எதற்காக முட்டாள் தனமாக ஹூடாவை கொண்டு சென்றார் என புரியவே இல்லை” என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரிஷப் பந்த் கண்டிப்பாக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now