டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் 3ஆவது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது கேப்டன் எர்வின் 19 ரன்னில் அவுட்டானார். மாதேவீர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Trending
மில்டன் ஷம்பா 8 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 9 ரன்னிலும் அவுட்டாகினர். சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 31 ரன்கள் எடுத்தார். 14 மற்றும் 15வது ஓவரில் ஜிம்பாப்வே அணி தலா 2 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து,131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 4 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்துவந்த இஃப்திகார் அஹ்மதும் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷாம் மசூத் - சதாப் கான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சிறுக சிறுக உயர்த்தினர். பின் சதாப் கான் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த பந்திலேயே ஹைதர் அலி விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார்.
பின்னர் 44 ரன்கள் எடுத்திருந்த ஷான் மசூத்தும் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் - முகமது வாசீம் ஜூனியர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இறுதியில் 2 பந்துகளில் மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் முகமது நவாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ர இக்கட்டான நிலை ஏற்ப்பட்டது.
அடுத்து களமிரங்கிய ஷாஹீன் அஃப்ரிடி இரண்டு ரன்களை அடிக்க முயற்சித்து ரன் அவுட்டாகினார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now