T20 WC 2024: நேபாள் அணியை 106 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது 106 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற இருந்த இப்போட்டியின் டாஸானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நேபாள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் சேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆசிஃப் சேக் 4 ரன்களுக்கும், குஷால் புர்டெல் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய அனில் ஷாவும் 11 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரி, சோம்பால் காமி ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
ஆனாலும் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் பௌடல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நேபாள் அணி 84 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த குல்ஷன் ஜா மற்றும் கரண் கேசி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கரண் கேசி இரண்டு சிக்ஸர்களுடன் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த குல்ஷன் ஜா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே அபினஷ் பொஹாராவும் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் நேபாள் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பால் வான் மீகெரன், பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now