டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதி செல்ல இதனை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் 17ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி இரண்டு வாரம் முன்பே ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று அங்கு மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது. இதனால் இம்முறை இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என அனைவராலும் நம்பப்படுகிறது.
Trending
இதனிடையே, இந்திய அணி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். அதில் “இந்திய அணியின் அங்கமாக கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் நான் இருக்கிறேன். முதலில் பயிற்சியாளராகவும் தற்போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறேன். என்னை பொறுத்த வரைக்கும் டி20 போட்டிகளில் இந்தியா களமிறக்கும் சிறந்த அணி இதுவாக தான் இருக்கும்.
சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும், ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்திலும், பந்த் அல்லது கார்த்திக் ஆறாவது இடத்திலும் பேட்டிங்கில் களமிறங்குவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இதனால் முன்வரிசை வீரர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி அதிரடியாக விளையாடலாம். இந்திய அணியில் இருக்கும் ஒரே ஒரு குறை என்றால் அது ஃபில்டிங் என்று நான் கருதுகிறேன்.
அதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஃபில்டிங்கில் கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடும் போது அவர்கள் தங்களது சிறப்பான ஃபில்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஃபில்டிங் மூலம் உங்களால் 15 முதல் 20 ரன்களை தடுக்க முடியும். இல்லையேனிக் நீங்கள் பேட்டிங் செய்யும்போது ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் 15 ,20 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டியதாக இருக்கும்.
ஃபில்டிங்கை பொறுத்த வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஏன் இலங்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அவர்கள் தங்களது ஃபில்டிங் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றனர். பந்து வீச்சில் பும்ரா இல்லை என்றாலும் வேறு ஒரு வீரருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என நான் கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now