சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட்!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடன் நெதர்லாந்து அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் ஆல் ரவுண்டர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா ஆகியோர் தலா 46 ரன்களைச் சேர்த்தனர்.
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையிலும், அடுத்து வந்த வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தால் 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Trending
இதன்மூலம் இலங்கை அணியானது 83 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்த ஏங்கெல்பிரெக்ட் அப்போட்டியின் முடிவுக்கு பிறகு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது 35 வயதை எட்டியுள்ள சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் கடந்த 2023ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்காக அறிமுகமாகி தலா 12 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 600 ரன்களுக்கு மேலும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் முன்னதாக தென் ஆப்பிரிக்காவிற்காக 2008ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now