வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது - ஐடன் மார்க்ரம்!
இதன் பிறகு இன்னமும் ஒரேயொரு போட்டிதான் இருக்கிறது. இது எங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு, அதனால் இதுகுறித்து பயப்பட ஒன்றுமில்லை என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இன்று தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
அந்த அணியில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற எந்த வீரர்களும் இரட்டை இலக்க ரன்களைச் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்ன் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் இணைந்த ரிஸா ஹென்றிக்ஸ் 29 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 23 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம், “இந்த வெற்றியானது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இது எங்களுடைய குழுவின் முழு உழைப்பாகும். மேலும் அணியின் வெளியில் இருந்தவர்களுக்கும் இந்த வெற்றியில் மிகமுக்கிய பங்கு உள்ளது. அவர்களின் உழைப்பிற்கான் பலன்கள் கிடைத்து வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஒருவேளை நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்கைத் தான் தேர்வு செய்திருப்போம். இப்போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டதுடன், சரியான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசினர். இந்த பிட்சில் பேட்டிங் செய்வது, மிகவும் கடினம். ஆனால் நல் வாய்ப்பாக எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது.
இதன் பிறகு இன்னமும் ஒரேயொரு போட்டிதான் இருக்கிறது. இது எங்களுக்கு ஒருபோதும் கிடைக்காத வாய்ப்பு, அதனால் இதுகுறித்து பயப்பட ஒன்றுமில்லை. அந்த போட்டிக்காக, எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவோம். இந்த வெற்றிக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது, எங்களிடம் சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர், ஆனால் நான் சொன்னது போல், அத்தகைய செயல்திறனை வழங்க முழு அணியும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now