ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய ரவி சாஸ்திரி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஃபீல்டிங்கில் அபாரமான செயல்பட்ட ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டர் விருதை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வழங்கியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் இணைந்த ரிஷப் பந்த் - அக்ஸர் படேல் இணை ஓரளவு தாக்குப்பிடித்தி ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக ரிஷப் பந்த் கொடுத்த அடுத்தடுத்த கேட்சுகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். இதன் காரணமாக இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 40 ரன்களைத் தாண்டியது.
Trending
அதன்பின் 20 ரன்களில் அக்ஸர் படேல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை பரிசளித்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 42 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முகமது அமீரின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, முகமது அமீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாயிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம், உஸ்மான் கான் மற்றும் ஃபகர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து தலா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இமாத் வசீம், ஷதாப் கான், இஃப்திகார் அஹ்மத் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டில் பேட்டிங்கில் 42 ரன்களையும், ஃபீல்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கினார். இதனையடுத்து இப்போட்டிக்கான சிறந்த ஃபீலடருக்கான விருதை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பந்திற்கு வழங்கினார். அப்போது பேசிய அவர், “இப்போட்டியில் ரிஷப் பந்த் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
Ravi Shastri presented the best fielder medal to Rishabh Pant! #T20WorldCup #INDvPAK #India #Pakistan #RishabhPant pic.twitter.com/HUGTMoxCqo
— CRICKETNMORE (@cricketnmore) June 10, 2024
முன்னதாக அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது கண் கலங்கினேன். மருத்துவமனையில் பார்த்தபோது அவருடைய நிலைமை மோசமாக இருந்தது.. இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா -பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியதுடன் அணியின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளது பிரம்மிக்க வைக்கிறது. அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும்.
அவரிடம் துருப்பச்சீட்டு இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு சிறப்பாக செய்வது அவருடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள லட்ச கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ந்து இதுபோலவே சிறப்பாக விளையாடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now