
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரின் ஒட்டுமொத்த பரிசுதொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பானது சுமார் 93.52 கோடி ரூபாய் ஆகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்களும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 7 லட்சத்து 87 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்களும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. மேற்கொண்டு சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா 3 லட்சத்து,82 ஆயிரத்து, 500 அமெரிக்க டாலர்களும், 9 முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2 லட்சத்து, 47 ஆயிரத்து, 500 அமெரிக்க டாலர்களும் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.