பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்பிவிட்டார் - ரோஹித் சர்மா!
டி20 உலக கோப்பையில் பும்ராவின் இடத்தை நிரப்பியிருப்பது அர்ஷ்தீப் சிங் தான் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி வெறவேண்டிய நெருக்கடியுடன் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
அதன்பின் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைபட்டது. அப்போது வங்கதேசம் வெற்றிபெற 78 பந்துகளில் 119 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லித்தன் தாஸ் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Trending
சில நிமிடங்களுக்கு பின் மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியது. அதேவேளை, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 16 ஓவர் முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்ததால், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குரூப் பி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
போட்டிக்கு பின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் கொடுத்தது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “டெத் ஓவர் தான் அர்ஷ்தீப் சிங்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமை. பும்ரா இல்லாத நிலையில், யாராவது ஒரு பவுலர் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கிற்கு பும்ராவின் இடத்தை நிரப்பி அவரது பணியை செய்வது சாதாரண விஷயமல்ல. ஆனால் அவரை அதற்காகவே தயார்படுத்தியிருக்கிறோம்.
கடந்த 9 மாதங்களாக அவரும் டெத் ஓவர்களை அருமையாக வீசியிருக்கிறார். ஷமி - அர்ஷ்தீப் இருவரில் ஒருவரிடம் கடைசி ஓவரை கொடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அர்ஷ்தீப் அந்த பணியை செய்துவருவதால் அவரிடம் கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now