நாங்கள் ஃபில்டிங்கில் கடுமையாக சொதப்பினோம் - ரோஹித் சர்மா!
கடும் குளிரால்தான் நாங்கள் கேட்ச்களை விட்டோம் என்று நான் காரணம் சொல்ல விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் தோல்வியை அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பிடித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Trending
இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். இரவு நேரத்தில் போட்டி தொடங்குவதால் ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று எங்களுக்கு தெரியும்.
அதனால் தான் 134 என்ற இலக்கை கூட தென்னாப்பிரிக்க வீரர்கள் எட்ட தடுமாறினர். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன் அடித்திருக்க வேண்டும். நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
முதல் பத்து ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தவுடன் எங்களுடைய இருப்பு ஆட்டத்தில் இருந்ததாக கருதினோம். ஆனால் மார்க்கரம் மற்றும் மில்லர் இணைந்து ஆட்டத்தை வெல்லும் வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நாங்கள் ஃபில்டிங்கில் கடுமையாக சொதப்பினோம். நிறைய கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் விட்டோம். கடும் குளிரால்தான் நாங்கள் கேட்ச்களை விட்டோம் என்று நான் காரணம் சொல்ல விரும்பவில்லை.
இதற்கு முன் குளிரான சூழலில் விளையாடி இருக்கிறோம். நாங்கள் ஃபில்டிங்கில் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக தான் ஃபில்டிங் செய்தோம். ஆனால் இன்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. சில ரன் அவுட்டுகளை நாங்கள் செய்ய முடியவில்லை. குறிப்பாக நானும் ரன் அவுட்டை மிஸ் செய்து விட்டேன். இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now