
ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து மண்ணை கவ்வியது. அதனால் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்டோபர் 25ஆம் தேதியன்று ஆசிய சாம்பியன் இலங்கையை எதிர்கொண்ட அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்றது.
பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயித்த 158 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11, மிட்செல் மார்ஷ் 18 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். ஆனால் அவர்களை விட கேப்டன் ஆரோன் பின்ச் அவுட்டாகாமலேயே 31 ரன்களுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி தோல்வியை நோக்கி அழைத்துச் சென்றார்.
அப்போது களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 23 ரன்கள் எடுத்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கைப் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வெறும் 18 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 59* ரன்கள் குவித்து அசால்டாக வெற்றி பெற வைத்தார். அதிலும் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் படைத்தார்.