வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது - விராட் கோலி!
கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 50, விராட் கோலி 64, சூர்யகுமார் யாதவ் 30 ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தினார்கள். இறுதியில் அஸ்வின் தனது பங்கிற்கு 13 ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது.
Trending
இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அபாரமாக விளையாடி 7 ஓவர்களிலேயே 59 ரன்களை சேர்த்த நிலையில், மற்றொரு ஓபனர் ஷான்டோ 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், வங்கதேச அணி 7 ஓவர்களில் 66/0 ரன்களை சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால், டக்வொர்த் முறைப்படி அந்த அணி 16 ஓவர்களில் 151 ரன்களை அடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதாவது அடுத்த 9 ஓவர்களில் 85 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது. அப்போது மழைக்கு பிறகான முதல் ஓவரிலேயே தாஸ் 60 ரன் அவுட் ஆனார். அடுத்து மற்ற பேட்டர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்தார்கள். கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் நூருல் ஹாசன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது சிங்கில் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால், வங்கதேச அணி 16 ஓவர்களில் 145/6 ரன்களை மட்டும் சேர்த்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 64 ரன்கள் அடித்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்ற பிறகு பேசிய விராட் கோலி, ‘‘போட்டி கடைசிவரை பரபரப்பாக சென்றது. நான் இப்படிப்பட்ட ஆட்டத்தைதான் அதிகம் விரும்புவேன். இயல்பாக விளையாடினாலே அதிக ரன்களை அடிக்க முடியும் என்ற மனநிலையோடுதான் களமிறங்கினேன்.
கடந்த இரண்டு வருடங்களில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் நல்ல ஷாட்களை ஆடினால் மட்டுமே ரன்கள் வரும். அதனை மனதில் வைத்துதான் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. இன்று மைதானத்திற்கு பின் வலைபயிற்சியில் ஈடுபட்டுவிட்டு, அப்படியே போட்டியில் களமிறங்கியது, வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now