டி20 உலகக்கோப்பை: மேத்யூ வேட்டிற்கு கரோனா உறுதி; ஆஸிக்கு அடிமேல் அடி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து மண்ணை கவ்வியது. அதனால் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்டோபர் 25ஆம் தேதியன்று ஆசிய சாம்பியன் இலங்கையை எதிர்கொண்ட அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நாளை மெல்போர்னில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. இரு அணிகளும் நடப்பு சீசனில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டத்தில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன.
Trending
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் மேத்யூ வேட்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதன்காரணமாக அவரே மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் வேண்டுமென்றால் டேவிட் வார்னரை விக்கெட் கீப்பராக நியமிப்போம் என அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். இதனால் டேவிட் வார்னர் கூட விக்கெட் கீப்பராக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now