
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு காஷ்யப் பிரஜபதி மற்றும் நசீம் குஷி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் காஷ்யப் பிரஜபதி மற்றும் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய கேப்டன் அகில் இலியாஸ் ஆகியோர் ரூபன் டிரம்பெல்மேன் பந்துவீச்சில் இன்னிங்ஸின் முதலிரண்டு பந்துகளிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான நசீம் குஷியும் 6 ரன்களில் டிரம்பெல்மேனின் பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் ஓமன் அணி 10 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஸீசான் மக்சூத் - கலித் கைல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
பின் 22 ரன்களில் ஸீசான் மக்சூத் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அயான் கான் 15 ரன்களுக்கும், முகமது நதீம் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கலித் கைல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 34 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மெஹ்ரான் கான், கலீமுல்லா, பிலால் கான் உள்ளிட்ட வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலுயனுக்கு திரும்பினார்.