
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தி இந்திய அணியானது 10ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் இந்திய அணியானது ரோஹித் சர்மாவின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்வின் அபாரமாக பந்து வீச்சின் மூலம் 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணியானது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிபோட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது.
இந்நிலையில் சமீப காலங்களாக ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய ஃபீல்டருக்கு பிசிசிஐ தரப்பில் பயிற்சியாளர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் வழங்கி கவுரவித்தார்.