அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது - பாபர் ஆசாம்!
வெற்றிக்கான முழு பாராட்டுகளும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் முகமது ரிச்வான், உஸ்மான் கான், ஃபகர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் - ஷதாப் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷதாப் கான் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கும், கேப்டன் பாபர் ஆசாம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
Trending
இறுதியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுகளையும், சௌரவ் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கேப்டன் மொனாங்க் படேல் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மொனாங்க் படேல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் ஆண்ட்ரிஸ் கஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, 50 ரன்கள் எடுத்திருந்த மொனாங்க் படேலும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த ஆரோன் ஜோன்ஸ் மற்றும் நிதீஷ் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதன்மூலம் அமெரிக்க அணியும் 20 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமா இழந்து 159 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இப்போட்டியானது சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது. இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது 18 ரன்களைச் சேர்த்து அசத்த, பாகிஸ்தான் அணியானது 13 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் அமெரிக்க அணியானது சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியிலேயே அமெரிக்க அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து வரலாற்று சாதனையைப் படைத்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், “இப்போட்டியின் பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த நேரங்களில் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். பந்து வீச்சிலும் முதல் 6 ஓவரில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை.
மிடில் ஓவர்களில் எங்களுடைய ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுக்காதது தோல்விக்கு காரணமானது. வெற்றிக்கான முழு பாராட்டுகளும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். பிட்ச் கொஞ்சம் ஈரப்பதமாக இருதலை பட்சமாக இருந்தது. இருப்பினும் இதை நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இத்தொல்வியின் காரணமாக அந்த அணி மீதான வீமரசனங்கள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now