
டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றில் விளையாடுகிறது. அதே போன்று டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணியை 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சந்திக்கிறது.
இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “அரையிறுதி போட்டி வரை வந்திருக்கிறோம் இப்போது எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நீண்ட பயணமாக இருந்தது. நாங்கள் என்ன செய்தோமோ, அதையே தான் திரும்பவும் செய்கிறோம். எந்த மாற்றமும் இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தோல்வியை குறித்து எங்களை மதிப்பிட வேண்டாம். ஒரு மோசமான போட்டி எங்களை யார் என்று விவரிக்காது. நாங்கள் அரையிறுதி போட்டி வரை வந்திருப்பது பெருமையாக கருதுகிறேன். துபாய் போன்ற மைதானங்களில் பவுண்டரி எல்லைக்கோடு ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் அடிலெய்டில் அப்படி கிடையாது. ஒவ்வொரு பகுதியிலும் பவுண்டரி எல்லை மாறுபடும்.