சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - அசாத் வாலா!
இப்போட்டியில் நாங்கள் போராடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என பாப்புவா நியூ கினி அணி கேப்டன் அசாத் வாலா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாப்புவ நியூ கினி அணியை போராடி வென்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாப்புவ நியூ கினி அணியானது சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இருப்பினும் செசே பௌவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் பாப்புவ நியூ கினி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக செசே பௌவ் 50 ரன்களையும், கிப்லின் டொரிகா 27 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இந்த இலக்கை எளிதாக விரட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது.
Trending
அணியின் அதிரடி வீரர்கள் ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 34 ரன்களிலும் என சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் 15, ரூதர்ஃபோர்ட் 2 ரன்களிலும் என ஆட்டமிக்க, விண்டீஸ் அணி 97 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் அதன்பின் இணைந்த ரோஸ்டன் சேஸ் - ஆண்ட்ரே ரஸல் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ்டன் சேஸ் 42 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய பாப்புவ நியூ கினி அணியின் கேப்டன் அசாத் வாலா, “இப்போட்டியின் இறுதிகட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் கூடுதல் ரன்களை சேர்க்க தவறவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும். இன்னும் 15-20 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் எங்களால் போதிய ரன்களைச் சேர்க்க முடியவில்லை. இருப்பினும் 136 ரன்களை எடுத்தது நல்ல முயற்சி என நினைக்கிறேன்.
இப்போட்டியில் நாங்கள் போராடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர். இது ஒரு வாய்ப்பு மற்றும் சவாலாக நாங்கள் காத்திருக்கிறோம். சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்போட்டியில் வெற்றிக்காக இறுதிவரை போராடிய பாப்புவ நியூ கினி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now