
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதில் இன்று நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கடந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியானது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிகுள் நுழைந்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது. இதனால் கடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கயானாவில் உள்ள புராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் மழையின் காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமாகி வருகிறது. மேலும் இப்போட்டிக்கு ரிஸர்வ் டேவும் அறிவிக்கப்படாத நிலையில், கூடுதலாக 7 மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணி வரை இப்போட்டியை நடத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவேளை கூடுதல் நேரத்தில் இப்போட்டி நடைபெற்றாலும், இரு அணிகளும் 10 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.