அச்சமற்ற கிரிக்கெட்டை எப்போதும் விளையாடுவோம் - ஆரோன் ஜோன்ஸ்!
உலகக் கோப்பைக்கு முன்பு நாங்கள் எப்போதும் பெரிய அணிகளையோ அல்லது சிறந்த அணிகளையோ தோற்கடிக்க முடியும் என்று நம்பினோம், வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு எதிராக அதைக் காட்டினோம் எனறு அமெரிக்க அணி துணைக்கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறியுள்ளன.
அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.
Trending
அதன்படி குருப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த அமெரிக்க அணியானது தங்களுடைய முதல் போட்டியில் கனடா அணியையும், இரண்டாவது போட்டியில் வலிமை வாய்ந்த பாகிஸ்தான் அணியையும் வென்று அசத்தியது. அதன்பின் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இறுதிக்கட்டத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அமெரிக்க அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அணியின் துணைக்கேப்டன் ஆரோன் ஜோன்ஸ், “எங்கள் அணி வீரர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதிலும் உலகின் சிறந்த அணிகக்கு எதிராக விளையாடுவதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். நாங்கள் எங்களுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி அதைச் செய்ய விரும்புகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் அதைப் பற்றி அதிகம் பேசி வருகிறோம்.
எங்களுடைய கடின முயற்சியால் நாங்கள் தற்போது இங்கே இருக்கிறோம். நாங்கள் எங்கள் கிரிக்கெட்டை ரசிக்கப் போகிறோம், நான் இத்தொடருக்கு முன்பு சொன்னது போல் அச்சமற்ற கிரிக்கெட்டை எப்போதும் விளையாடுவோம். யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இது தொடங்குகிறது என்று நினைக்கிறேன். உலகக் கோப்பை தொடருக்கு முன்பே நாங்கள் ஒரு சில தொடர்களை வென்றுள்ளோம்.
வெளிப்படையாக கூறவேண்டும் எனில் நாங்கள் வங்கதேச அணிக்கு எதிராக தொடரை வென்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அணி ஒன்று தான். உலகக் கோப்பைக்கு முன்பு நாங்கள் எப்போதும் பெரிய அணிகளையோ அல்லது சிறந்த அணிகளையோ தோற்கடிக்க முடியும் என்று நம்பினோம், வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு எதிராக அதைக் காட்டினோம். இப்போது சூப்பர் எயிட்ஸுக்குச் செல்லும் அதே மனநிலைதான் இருக்கப் போகிறது. நாங்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now