
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது. இதில் காயத்திலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்த ரஷித் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது முதல் இடத்தை தக்கவைத்தார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மேலும் இப்பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6ஆம் இடத்தில் நீடித்து வருகிறார்.
அதேசமயம் டி20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் ஆதில் ரஷித் முதல் இடத்திலும், இலங்கையின் வநிந்து ஹசரங்கா இரண்டாம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இந்திய வீரர்கள் அக்ஸர் படேல் 4ஆம் இடத்தையும், ரவி பிஷ்னோய் 6ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் அயர்லாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கான் 4 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.