
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நடைபெற்றது தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாத்மான் இஸ்லாம் அரைசதம் கடந்த நிலையில், 64 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய் வீரர்களில் மெஹிதி ஹசன் மிராஸ் 36 ரன்களையும், ஷஹாத் ஹொசைன் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 39 ரன்களையும், கேசி கார்டி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நஹித் ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் வங்க்தேச அணி முதல் இன்னிங்ஸில் 18 ரன்கள் முன்னிலையும் பெற்றது.