
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு இந்திரஜித் மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் இந்திரஜித் தனது விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பினையும் தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜெகதீசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 88 ரன்களைச் சேர்த்து கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் இதற்கு மத்தியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய பூபது குமார் 36 ரன்களையும், ரித்திக் ஈஸ்வரன் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஸ்கோரை கொண்டுவந்தனர்.