
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆண்ட்ரே சித்தார்த்தின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்களையும், ஜெகதீசன் 63 ரன்களையும் சேர்த்தனர். சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சண்டிகர் அணியில் தொடக்க வீரர் ஷிவம் பாம்ப்ரி பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 74.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.