
இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கியது. இத்தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியானது ஆரம்பம் முதலே தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் அர்பித் வசவதாவின் அரைசதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 203 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அர்பித் வசவதா 62 ரன்களைச் சேர்த்திருந்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், முகமது, கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் விளையாடிய சாய் சுதர்ஷன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 100 ரன்களையும், சாய் சுதர்ஷன் 82 ரன்களையும் சேர்த்தனர்.