
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் மிசோரம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மிசோரம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மிசோரம் அணிக்கு ஜெஹு ஆண்டர்சன் மற்றும் லால்ஹ்ரியாத்ரெங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லால்ஹ்ரியாத்ரெங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் ஆண்டர்சனும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய அக்னி சோப்ரா 23 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் மிசோரம் அணியானது 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 71 ரன்களில் ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5.2 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு சந்தீப் வாரியர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.