
ஐசிசி சில மாதங்களுக்கு முன்பு பந்துவீச்சாளர் முனையில் பந்துவீச்சாளரால் முன்கூட்டியே கிரீசை தாண்டும் பேட்ஸ்மேனை செய்யப்படும் ரன் அவுட்டை அங்கீகரித்தது. ஆரம்பத்தில் விதியில் இருந்தாலும் கூட ரன் அவுட் என்கிற பெயர் அங்கீகாரம் தற்சமயம்தான் கிடைத்தது. இந்த வகையான ரன் அவுட் விளையாட்டின் உத்வேகத்தை குறைக்கும் ஒரு அநாகரிகமான செயலாக பலரால் பார்க்கப்பட்டது. தற்பொழுதும் கூட சிலரால் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த வகையான ரன் அவுட்டை முழுதாக ஆதரிக்கக்கூடியவர். அவரே முன்னென்று இந்த மாதிரியான ரன் அவுட்டை செய்பவர். ஐபிஎல் தொடரில் பட்லருக்கு எதிராக அவர் செய்தது பெரிய சர்ச்சையாக மாறியது. ஆனால் அவர் அவருடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
அதே சமயத்தில் இங்கிலாந்து ஒட்டுமொத்த அணியும் இந்த வகையான ரன் அவுட்டை கடுமையாக எதிர்க்கக் கூடியவர்கள். அவர்களும் இந்த வகையான ரன் அவுட்டை யாருக்கும் செய்வது கிடையாது. இதனால் அவர்கள் எப்பொழுதும் இந்த ரன் அவுட்டை செய்யக்கூடிய வீரர்,வீராங்கனைகளை விமர்சித்தே வந்திருக்கிறார்கள்.