ENG vs IND: தொடக்க வீரர் இடத்திற்கு நீடிக்கும் இழுபறி!
காயமடைந்துள்ள இந்திய வீரா் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்பதை தோ்வு செய்வதில், இந்திய அணி நிா்வாகம்-பிசிசிஐ இடையே இழுபறி நீடித்து வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வந்த சுப்மன் கில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் சூழல் நிலவியுள்ளது.
இதனால் கில்லுக்குப் பதிலாக 2 தொடக்க வீரா்களை ‘மாற்று வீரா்கள்’ ஆக அனுப்புமாறு பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோா் அடங்கிய இந்திய அணி நிா்வாகம், கடந்த ஜூன் 28ஆம் தேதி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தது.
Trending
முன்னதாக அவரது இடத்துக்கு அபிமன்யு ஈஸ்வரன் பரிசீலிக்கப்பட்டிருந்தாா். எனினும் அபிமன்யுவின் பேட்டிங் நுட்பங்கள் அணி நிா்வாகத்துக்கு பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை என்றும், பந்துவீச்சு நிபுணா் ராகவேந்திராவின் பந்துவீச்சை அவா் எதிா்கொள்ள சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தொடக்க வீரா்கள் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோரை அனுப்புமாறு அணி நிா்வாகம் கோரியுள்ளது. எனினும், கடந்த 3 நாள்களுக்கு முன்பு வரையிலும் தோ்வாளா்கள் குழு தலைவரான சேத்தன் சா்மா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூா்வ பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியிலேயே தொடக்க வீரா்களாக களமிறக்க வாய்ப்புள்ள 4 வீரா்கள் இருக்கும் நிலையில், மேற்கொண்டு இரு வீரா்களை இங்கிலாந்துக்கு அனுப்ப தோ்வுக் குழு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோரை இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணி நிா்வாகம் கோரும் நிலையில், அவா்களை அனுப்பும் மனநிலையில் பிசிசிஐக்கு இல்லை என்பதே இதில் தெரிகிறது.
இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘தற்போது இலங்கையில் இருக்கும் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஜூலை 26ஆம் தேதி தொடரை நிறைவு செய்யும் வரை அங்கேயே இருப்பாா். அதன் பிறகு இருக்கும் வாய்ப்புகள் குறித்து அப்போது யோசிக்கப்படும். இப்போதைய சூழலில் அவர்களை இங்கிலாந்து அனுப்புவது சாத்தியமில்லை. இதற்கு முன் கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் கண்டுள்ளாா். தற்போது ஏன் அவரை மிடில் ஆா்டா் வீரராகவே கருத வேண்டும்? இங்கிலாந்து தொடரில் அனைவருக்குமான வாய்ப்பும் சமமானதாகவே இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now