
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸான்ஃபர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை அவர் படைத்து அசத்தியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச அரங்கில் ஆஃப் ஸ்பின்னராக அறிமுகமான கசன்ஃபர் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 19 வயதிற்குள் ஒரு பந்துவீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறை. தற்போது கசன்பரின் வயது 18 ஆண்டுகள் 276 நாட்களாகும்.
அதன்படி, ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கசான்ஃபர் 10 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் ஷார்ஜாவில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் கசன்ஃபர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்பது 18 வயது 231 நாட்களில், ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 5ஆவது இளம் பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பெற்றார்.