
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது நேற்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணிக்கு டுவைன் ஸ்மித் மற்றும் பிரையன் லாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மித் ஒருமுனையில் நிதானமாக விளையாடிய நிலையில், பிரையன் லாரா 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய பெர்கின்ஸ் 6 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் டுவைன் ஸ்மித்துடன் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுவைன் ஸ்மித் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய சிம்மன்ஸும் 57 ரன்களை மாட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கியா வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.