2-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பதிவு நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ஜிம்பாப்பேவுக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்று அரை இறுதிக்குள் நுழைய தயாராகி வரும் இந்தியா இத்தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் முயற்சிக்கவுள்ளது.
அதிலும் அதிரடியாக தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா ஆகியோர் துணை கேப்டன் மற்றும் கேப்டனாக இருந்தும் பொறுப்புடன் செயல்படாமல் சொற்ப ரன்களில் அவுட்டாவது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 50 ரன்கள் குவித்தது போல் அடுத்து வரும் போட்டிகளில் ஓப்பனிங் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதே போல் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் அடுத்து வரும் போட்டிகளில் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதை தவிர ஜஸ்பிரிட் பும்ரா இல்லாமல் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை ஷமி, புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் ஆகியோரால் வெற்றிகளில் பங்காற்றும் நிலையில் ஃபீல்டிங் துறையில் சற்று முன்னேற்றம் தேவைப்படுகிறது. எனவே 2014 முதல் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்று போட்டிகளில் செய்த சொதப்பலை மீண்டும் செய்யாமல் இம்முறை சிறப்பாக செயல்படுமாறு இந்திய அணியை சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர்கள் எச்சரிக்கையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.