இது தான் எங்களுடைய பிரச்சனையாக இருந்துள்ளது - கேஎல் ராகுல்!
இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய ஒன்று தான் என நினைத்தோம். நாங்கள் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றிருக்க வேண்டும் என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியில் கேஎல் ராகுல், டி காக், மார்கஸ் ஸ்டொய்னிஸ், தீபக் ஹூடா, ஆயூஷ் பதோனி, குர்னால் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Trending
இருப்பினும் இப்போட்டியில் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிக்கோலஸ் பூரன் 61 ரன்களையும், அர்ஷத் கான் 58 ரன்களையும் சேர்த்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டி முடிந்து அணியின் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இன்றைய போட்டியின் 40 ஓவர்களிலும் ஆடுகளம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் முதல் ஓவரிலேயே ஜேக் ஃபிரேசரை வெளியேற்றினோம். ஆனால் அதை எங்களால் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில் அபிஷேக் மற்றும் ஹோப் இருவரும் சிறப்பாக விளையாடி எங்களை அழுத்தத்தில் தள்ளினர்.
ஆனால் இறுதி ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். மேலும் இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய ஒன்று தான் என நினைத்தோம். நாங்கள் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த சீசன் முழுவதுமே இது தான் எங்களுடைய பிரச்சனையாக இருந்துள்ளது. ஏனெனில் நாங்கள் பவர் பிளேவில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருக்கிறோம். இதன் காரணமாக எங்களால் பூரன் மற்றும் ஸ்டோய்னிஸ் இடம் இருந்து சிறந்ததை பெற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now