
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகின.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), நடந்து வரும் ஐபில் 2025 தொடரின் எஞ்சிய போட்டிகளை உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.