
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயெ டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணியானது 16 ரன்களுக்குளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
.இதனையடுத்து இணைந்த சைம் அயூப் மற்றும் சௌத் ஷகீல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதில் சைம் அயூப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அவருக்கு துணையாக அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வானும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி தரப்பில் சௌத் ஷகீப் 57 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ரன்களைளுடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.