
முதல் முறையாக இந்திய அணிக்கு எதிரான நேரடி டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இந்திய அணியில்ல் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் தொடக்க வீரர்கள் தலா 50 ரன்களும், கடைசி வரை கடுமையாக போராடிய குல்பதீன் நைப் 55* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது.
அதன் பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்ததால் முதல் சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. பின் இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி ரவி பிஸ்னோயின் பந்துவீச்சில் சிக்கி 1 ரன்னில் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.