
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் ஆடவர் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பர்மிங்ஹாம் ஃபீனிங்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் எய்த சதர்ன் பிரேவ் அணியில் தொடக்க வீரர் அலெஸ்க் டேவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - லூயிஸ் டூ ப்ளூய் ஆகியோர் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் லூயிஸ் டூ ப்ளூய் 39 ரன்களிலும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 43 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கிறிஸ் ஜோர்டன் 20 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் இன்னிங்ஸ் முடிவில் சதர்ன் பிரேவ் அணியானது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் மில்னே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 7 ரன்களுக்கும், கேப்டன் மொயீன் அலி 24 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் - ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் லியாம் லிவிங்ஸ்டோன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுபக்கம் ஜேக்கப் பெத்தேல் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார்.